Ticker

6/recent/ticker-posts

டெங்கு பற்றி அறியுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள் !

டெங்கு காய்ச்சல் (Dengue fever)

Dengue fever
Dengue fever

டெங்கு காய்ச்சல் (Dengue fever) நான்கு வகை டெங்கு வைரஸ்களினால் ஏற்படுகிறது. இந்த வைரஸ்கள் Aedes இன நுளம்புகளினால் பரப்பப்படுகிறது. டெங்கு 100 இற்கும் அதிகமான நாடுகளில் ஒரு பயங்கரமான நோயாக உருவெடுத்துள்ளது. உலக சனத்தொகையில் 40 வீதமான மக்கள் அதாவது 3 பில்லியன் மக்கள் டெங்கு பாதிக்கப்பட கூடிய இடங்களில் வாழ்கின்றனர்.

தற்போதைய நிலைமையில் டெங்கு காய்ச்சலை (Dengue fever) ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் டெங்கு நோயினால் ஏற்படும் பாதிப்புகளையும், இறப்புகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இந்த பதிவு டெங்கு நோய்  (Dengue fever) பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்குகிறது.


டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Symptoms of dengue fever)

சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Symptoms of dengue fever) டெங்கு நுளம்பு கடித்து 4 – 7 நாட்களின் பின்னரே ஏற்படும். முக்கிய அறிகுறியாக 104 F degree காய்ச்சல் ஏற்படும். அத்துடன் கீழ் வரும் எதாவது இரண்டு அறிகுறிகளும் ஏற்படும்.

  • தலை வலி
  • தசை மற்றும் எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கண்களின் பின்புறம் வலி
  • வீங்கிய சுரப்பிகள்
  • உடலில் சிவப்பு புள்ளிகள் 

சாதாரணமான டெங்கு காய்ச்சலாக இருந்தால் ஒரு கிழமைக்குள் குணமடைந்து விடுவார்கள். ஆனால் கடுமையான டெங்கு (Dengue hemorrhagic fever) ஏற்படின் அது உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.


கடுமையான டெங்கு (Dengue hemorrhagic fever)

கடுமையான டெங்கு (Dengue hemorrhagic fever) அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. கடுமையான டெங்கு ஆரம்பத்தில் சாதாரண டெங்கு காய்ச்சலின் (Dengue fever) அறிகுறிகளையே காட்டும். சில நாட்களின் பின்னர் நோயாளிகளில் கடுமையான டெங்கு நோயின் ஆரம்ப அறிகுறிகள் வெளிப்படும். இந்த அறிகுறிகளில் முக்கியமானது உடல் வெப்ப நிலை 38 C degree இனை விடக் குறைந்து விடும். அதாவது காய்ச்சல் இருக்காது. மேலும் பின்வரும் அறிகுறிகளும் காணப்படும்.

  • கடுமையான வயிற்று வலி
  • வேகமான மூச்சு விடுதல்
  • தொடரான வாந்தி
  • வாந்தியில் இரத்தம்
  • மூக்கில் இருந்து இரத்தம்
  • ஈரல் வீக்கம்
  • குருதி தட்டுகளில் குறைவு
  • சோம்பல்  

·  இந்த அறிகுறிகள் காணப்படும் நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பது கட்டாயமாகும்.


கடுமையான டெங்கு இன் பாதிப்புகள்         

நோயாளியின் உடலில் ஆங்காங்கே இரத்தம் வெளியேறும் புள்ளிகள் காணப்படும். இதனால் இரத்தமும் பிளாஸ்மாவும் வெளியேறும். மேலும் நுரையீரல், ஈரல் மற்றும் இதயத்தினை பாதிக்கக் கூடியது. அத்துடன் இரத்த அமுக்கம் மிகவும் குறைந்து வலிப்பு அல்லது மரணம் ஏற்படலாம்.


கடுமையான டெங்கு காய்ச்சலின் பிந்திய அறிகுறிகள்  

  • தோலில் காணப்படும் புள்ளிகளின் மூலம் கடுமையான இரத்தப்போக்கு
  • கருமையான மலம்
  • சிறுநீரில் இரத்தம்
  • கடுமையான குருதி பிளாஸ்மா வெளியேற்றம்
  • மூச்சு விடுவதில் அதிக சிரமம்
  • ஈரல், இதயம் மற்றும் ஏனைய உறுப்புகள் செயலிழப்பு
Symptoms of dengue fever
Symptoms of dengue fever

கடுமையான டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை (Treatment of dengue)

கடுமையான டெங்கு காய்ச்சலுக்கு சரியான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துக் கவனிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கான சிகிச்சையாக இரத்தம் மற்றும் குருதி சிறு தட்டுகள் பரிமாற்றம் செய்யப்படலாம் அல்லது சுவாசிப்பதை இலகுவாக்குவதற்கு ஆக்ஸிஜென் வழங்கப்படலாம்.

சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டால் மாத்திரமே கடுமையான டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்ற முடியும். சிகிச்சை அளிக்கத் தாமதமானால் மரணம் ஏற்படலாம்.

எனவே டெங்கு காய்ச்சலின் சாதாரண அறிகுறிகள் தெரியும் போது வைத்தியரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் டெங்கு நோயினால் ஏற்பட இருக்கும் உயிர் இழப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.


டெங்கு வர முன் தடுத்தல் (Dengue prevention)

டெங்கு காய்ச்சல் (Dengue fever)  வந்த பிறகு அவதிப்பட்டு சிகிச்சை பெறுவதை விட அது வரும் முன் தடுப்பது சாலச்சிறந்தது. டெங்கு காய்ச்சல் வரமுன் தடுக்கும் முறைகளை கீழே பார்க்கலாம்.

டெங்கு காய்ச்சல் நுளம்புகளினாலேயே பரவுவதால் நுளம்புகளை கட்டுப்படுத்தினால் அல்லது நுளம்பு கடிப்பதை தடுத்தால் டெங்கு காய்ச்சலையும் தடுக்க முடியும்.


  • இதற்கு நுளம்புகளை விரட்டும் பாதுகாப்பான பூச்சி கொல்லிகளை (Mosquito repellent) பயன்படுத்தலாம்.
  • நுளம்புகள் கடிப்பதை தடுப்பதற்கு நுளம்பு வலைகளை (Mosquito net) பயன்படுத்த முடியும்.
  • நுளம்பு கடிப்பதை குறைக்கும் உடைகளை அணியலாம். அதாவது Long sleeve shirt, Long pants, shoes or shocks and hat.
  • நுளம்புகள் வீட்டினுள் நுழைவதை தடுப்பதற்கு ஜன்னல் மற்றும் கதவுகளை மறைக்கும் வலைகளை (Window net for mosquitoes) பயன்படுத்தலாம்.
  • டெங்கு நுளம்புகள் நிலையான சுத்தமான நீரினில் தான் முட்டைகளை இட்டு பெருகும். வீட்டிற்கு அருகில் நீர் தேங்கும் இடங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டிற்கு அருகில் இவ்வாறு நீர் தேங்கும் இடங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

  • Buckets மற்றும் நீர் ஊற்றும் வாளிகளை மூடி மழை நீர் படாத இடங்களில் வைத்தல்
  • அளவுக்கு அதிகமான நீரை வீட்டு பூச்சாடிகளின் அடியில் இருந்து நீக்குதல்.
  • வடிகால்களில் அடைப்புகளை நீக்குதல்.
  • இளநீர் கோம்பைகள், யோகர்ட் cup போன்றவற்றை ஆங்காங்கே எறிவதை தடுத்தல்.

மேலும் கிணறுகளில் நுளம்புக் குடம்பிகளை உண்ணும் மீன்களை வளர்ப்பதன் மூலமும் டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்க முடியும்.

Post a Comment

0 Comments