நீரிழிவு நோய் (Diabetes)
Diabetes |
இந்த பதிவில் நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய நீரிழிவு நோய் (Diabetes) பற்றிய சில அடிப்படை விபரங்களை பார்க்க இருக்கிறோம்.
நீரிழிவு நோய் (Diabetes) என்பது இன்று வயது வித்தியாசம் இன்றி சிறியவர் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு மிக முக்கியமான நீண்ட கால நோய் என்று குறிப்பிடலாம்.
நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன?
மிக எளிய வடிவில் சொல்ல வேண்டுமென்றால் எமது உடலில் இரத்தத்தில் குளுகோஸ் (Glucose) இன் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படுகிறது.
குளுகோஸ் (Glucose) என்றால் என்ன? இது மாப்போருளின் ஒரு எளிய வடிவம் ஆகும். அத்துடன் எமது உடலுக்கு தேவையான சக்தியை வழங்கக்கூடிய ஒரு சக்தி மூலமாகும்.
இது நாம் உண்ணும் மாப்பொருள் கொண்ட உணவுகள், அதாவது சோறு, ரொட்டி, இடியப்பம், இட்லி போன்ற உணவுகள் சமிபாடு அடைவதனால் இறுதியில் குளுகோஸ் ஆக எமது இரத்தத்தில் கலக்கப்படும்.
ஏன் நீரிழிவு நோயாளர்களுக்கு (Diabetic patients) இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகரிக்கிறது ?
இந்த குளுகோஸ் சாதாரணமான உடல் ஆரோக்கியம் உள்ள ஒருவருக்கு இரத்தத்தில் அதிகரித்தாலும் உடலில் நடக்கும் ஒரு செயன்முறை மூலமாக சாதாரண நிலைக்கு கொண்டு வரப்படும்.
ஆனால் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாப்போருள் கொண்ட ஒரு உணவையோ அல்லது நேரடியாக சீனி உள்ள ஒரு உணவையோ சாப்பிடும் போது அவரின் இரத்தத்தில் குளுகோஸ் இன் அளவு அதிகரித்தால் அது சாதாரண நிலைக்கு வருவதில்லை. தொடர்ந்து அதிகரித்தே காணப்படும்.
இதற்கு காரணம் குளுகோஸை உடலில் கட்டுப்படுத்தும் ஹோர்மோன் (Hormone) ஆன இன்சுலின் (Insulin) நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை அல்லது முற்றிலுமே உற்பத்தி செய்யப்படுவதில்லை.
ஏன் நீரிழிவு நோயாளர்களுக்கு உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுவதில்லை.?
இன்சுலின் எமது உடலில் காணப்படும் சதையி (Pancreas) எனப்படும் ஒரு அங்கத்தினாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அங்கம் பகுதியளவு அல்லது முற்றிலும் பாதிக்கப்படும் போது இன்சுலின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.
நீரிழிவு நோயின் வகைகள் ( Types of diabetes )
நீரிழிவு நோய் (Diabetes) பிரதானமாக மூன்று வகைப்படுகிறது. அவையாவன:1) முதலாம் வகை நீரிழிவு நோய் (Type 1 diabetes)
2) இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes)
3) கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational diabetes)
முதலாம் வகை நீரிழிவு நோய் ( Type 1 Diabetes )
முதலாம் வகை நீரிழிவு நோய் பெரும்பாலும் சிறு பிள்ளைகளுக்கே ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவின் போது உடலில் இன்சுலின் மிகக் குறைந்த அளவில் அல்லது முற்றிலுமே உற்பத்தி செய்யப்படுவ தில்லை.
அதனால் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இன்சுலின் ஊசியின் மூலம் தினமும் வழங்கப்பட்டால் மாத்திரமே இவர்களின் உடல் சீனியின் அளவை கட்டுப்படுத்த முடியும்.
இரண்டாம் வகை நீரிழிவு நோய் ( Type 2 Diabetes )
உலகில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 90% ஆனவர்கள் இரண்டாம் வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். . இவ்வகை நீரிழிவின் போது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை எமது உடல் சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இதனால் வாய்முல மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இவ்வகை நீரிழிவினை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் சுகாதாரமான வாழ்க்கை முறை அதாவது சரியான உடல் பயிற்சி மற்றும் முறையான உணவுப்பழக்கம் மூலமும் இவ்வகை நீரிழிவினை கட்டுப்படுத்தலாம்.
கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational diabetes)
இது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தற்காலிகமாக ஏற்படும் நீரிழிவு நோய் (Diabetes) ஆகும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
பிள்ளை பேரின் பிறகு இந்த நீரிழிவு குணமாகி விடும். ஆனால் பிள்ளைக்கு பிற்காலத்தில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...
0 Comments
Please comment appropriately. Do not comment irrelevant links.